சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவு பொருள் தரக்கட்டுப்பாட்டு
அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் நடத்திய சோதனையில் டன் கணக்கில்
கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதை அண்மையில் ஊடகங்கள் பதிவு
செய்த செய்தி. ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து
ஆட்டிறைச்சி கொண்டுவரப்பட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் விற்பனை
செய்யப்படுவதும் தெரியவந்தது. ‘தமிழகத்தை விட மற்ற சில மாநிலங்களில்
ஆட்டிறைச்சி விலை குறைவாக இருப்பது’ இதன் மூலம் கிடைத்த தகவல்.
இதனை தொடர்ந்து ஆடுகளை வாங்கி வர்த்தகம் செய்யும் நபர் ஒருவரை
அண்மையில் சந்திக்க நேர்ந்தது. ஆடு வியாபாரம் பற்றி அவரிடம் பேசிக்
கொண்டிருந்த போது அவர் கூறி சில தகவல்கள் சுவாரஸ்மாக, அதே சமயம்
அதிர்ச்சிகரமாகவும் இருந்தது.
‘அண்மைக்காலமாகவே ஆடுகளின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு
காரணம் ஆடுகளின் வரத்து குறைந்து போனதே காரணம். தேவையை விட மிகக்குறைவான
அளவில் ஆடுகள் கிடைப்பதால் அதன் விலை உயர்ந்து விட்டதாக,’ அவர் கூறினார்.
எடைக்குறைவான ஆடுகள் கூட 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பது சிரமம் என்பதும்
அவரது கருத்தாக இருந்தது. மாடுகள் வாங்க வேண்டிய விலைக்கு ஆடுகளை வாங்க
வேண்டிய திருப்பதாகவும் கூறினார். குறிப்பாக செம்மறி இன ஆடுகளுக்கே இந்த
அளவு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதற்கு காரணம் என்ன என சற்று ஆராய்ந்ததில் விரிவான தகவல்கள் கிடைத்தன.
வெள்ளாடுகள் பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் செம்மறி ஆடுகள்
மேய்ச்சல் நிலங்களில் மட்டுமே ‘கிடை’ போட்டு வளர்க்கப்படுகின்றன. காய்ந்த
புல்லை மட்டுமே மேய்பவை செம்மறியாடுகள். வெள்ளாடுகளை போல கிடைக்கும்
தாவரங்களை உட்கொண்டு உயிர் வாழ்பவையல்ல செம்மறியாடுகள். இதனால் அவைகளுக்கு
தனித்துவமான மேய்ச்சல் நிலங்கள் தேவைப்படுகிறன. நகர்மயமாதல், குறிப்பாக
தற்காலத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இறையாகும் முதன்மையான நிலம் இந்த
மேய்ச்சல் நிலங்களே. தமிழகத்தில் இந்த நிலத்தின் அளவு குறைந்து வருவது
செம்மறியாடுகளின் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுமட்டுமல்லாது, ‘கிடை’ போட்டு ஆடு வளர்க்கும் தொழிலில்
ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்து
இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பலர்
பல காரணங்களுக்காக மேய்ச்சல் தொழிலை கைவிட்டு விட்டனர். இதனால்
செம்மறியாடுகளை ‘கிடை’ போட்டு வளர்க்கும் தொழிலும் தமிழகத்தில் நசிந்து
விட்டது. இந்த காரணங்களால் ஆடு வளர்ப்பு வெகுவாக குறைந்திருக்கிறது.
அதேசமயம் ஆட்டிறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
இருக்கிறது. கடந்த சிலஆண்டுகளில் புலால் உணவு உட்கொள்பவர்கள் அதிகரித்து
இருப்பதால் ஆட்டிறைச்சிக்கான தேவையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. போதிய
அளவு ஆடுகள் கிடைக்காத நிலையில் தேவை மட்டும் உயர்ந்து வருவதால் ஆடுகளின்
விலை உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலி, தமிழ்நாட்டில் ஆடுகள்
கிடைக்காததாலும், விலை அதிகமாக இருப்பதாலும் மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற
மாநிலங்களில் இருந்து ஆட்டிறைச்சி ரயில்களில் கொண்டு வரப்பட்டு சென்னை
போன்ற நகரங்களில் விற்கப்படுகின்றன.
இந்த நேரத்தில் ஆடுகள் அரிதாகி வரும் மற்ற மாநிலங்கள் என்று பார்த்தால்
வடகிழக்கு மாநிலங்கள் தானாம். அங்கு பெருமளவு ஆடுகள் இறைச்சிக்காக
பயன்படுத்தப்பட்டு விட்டதால் ஆடுகள் அரிதான உயிரினமாகி விட்டது. இப்போது
அங்கு மாடுகளுக்கும் அந்த நிலை ஏற்பட்டிருக்கின்றன. ஆடு, மாடுகள்
இல்லாததால் பன்றி, நாய்கள் போன்றவையும் அங்கு பெருமளவு இறைச்சிக்காக
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையை ஒப்பிட்டால் தமிழகத்திலும் ஆடுகளின் நிலை இது தானோ! என
எண்ணத் தோன்கிறது. தமிழகத்தில் செம்மறி ஆடுகளுக்கான இடம், இனி உயிரியல்
பூங்காக்கள் தான் என்று ஆகிவிடும். மான்களை போல ஆடுகளையும் எதிர்கால
தலைமுறைக்கு காட்சிப்பொருளாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். டையனோசர்
தொடங்கி எத்தனையோ விலங்கினங்களும், பறவையினங்களும்
அருங்காட்சியப்பொருளாகி விட்டன. அந்த வரிசையில் செம்மறி ஆடுகளும் இடம்
பெற்று விடக்கூடாது.