தர்பூசணி விற்பனை


        கோடைக்காலம் வந்து விட்டால் வழக்கத்தை விட தாகத்தின் வேட்கை அதிகமாக இருக்கும். அப்போது இளநீர், மோர், குளிர்பானம், கரும்புசாறு, வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் போன்றவற்றை பருகி தாகத்தை தணித்துக்கொள்வார்கள். இதற்காக சாலையோரங்களில் சிலர் கடைகள் வைத்து குளிர்பானங்களை விற்பனை செய்வார்கள்.

    கடலூரில் தற்போது இரவு நேரம் கடும் குளிரும், பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலுமாக இருந்து வருகிறது. கோடை தாகத்தை தணிக்க கடைகளில், பழச்சாறு, குளிர்பானங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது தவிர கடலூர் நகரின் முக்கிய சாலையோரங்களில் சிலர் தள்ளுவண்டிகளில் கரும்புச்சாறு, இளநீர், சாத்துக்குடி ஜூஸ் ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

     இந்த நிலையில் கோடையின் தாகத்தை தணிக்க புதிய வரவாக தர்பூசணி வரத்து அதிகரிக்க தொடங்கிவிட்டது. கலெக்டர் அலுவலக சாலை, பீச்ரோடு, கடலூர் சிதம்பரம் சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகளின் ஓரத்தில் தர்பூசணிகளை மலைபோன்று குவித்து வைத்து விற்பனை செய்ததை காண முடிந்தது. ஒரு கிலோ ரூ.10–க்கும், ஒரு துண்டு ரூ.3, 5–க்கும் விற்பனை செய்யப்பட்டது. பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவற்றை வாங்கி சாப்பிட்டு தாகத்தை தணித்துக்கொண்டனர்.

    இது குறித்து தர்பூசணி வியாபாரி ராமகிருஷ்ணன் என்பவர் கூறும்போது, 'நான் நான் பஸ்நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்து வருகிறேன். சீசன் நாட்களில் தள்ளுவண்டியில் தர்பூசணி வியாபாரம் செய்வேன். அந்த வகையில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறேன்.

        இந்த தர்பூசணிகள் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒருவாரம் சீசன் இருக்கும். அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் முகையூர் மற்றும் திண்டிவனம் முருக்கேணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்தும் தர்பூசணிகள் வரும். அங்கு சீசன் முடிந்த பின்னர் சேத்தியாத்தோப்பு பாளையங்கோட்டையில் இருந்து தர்பூசணி வரும்.

        ஒரு கிலோ தர்பூசணி ரூ.10–க்கு விற்பனை செய்கிறேன். வழியில் செல்லும் போது பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சாப்பிடுவதற்காக தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்தும் விற்பனை செய்து வருகிறேன்' என்றார்.