மழைநீரை சேமிக்க அணை இருந்தும் நீர்பற்றாக்குறையால் நெல்லை மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


   ழையின்றி விவசாயம் பாதிப்பது வழக்கம். மழைநீரை சேமித்து வைக்க வழியின்றி விவசாயிகள் தவிப்பதும் நடக்கும். ஆனால், மழைநீரை சேமிக்க அணை இருந்தும் நீர்பற்றாக்குறையால் நெல்லை மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி மரம், செடி கொடிகள் வளர்ந்து வனம் போல் காட்சியளிக்கும் இது, மோட்டை நீர்த்தேக்க அணையாகும். நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணையை நம்பி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாறைகள் மற்றும் மணலால் மூடி, மடைகளும் ஓட்டையாகிவிட்டதால் ஒரு போகம் கூட பயிர் செய்ய முடியாத அளவுக்கு நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
  27 அடி உயரமுள்ள அணையில் 10 அடிக்கும் மேல் மணல் நிறைந்துவிட்ட நிலையில், அணையை தூர் வார்வதற்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள். விவசாயிகளின் கோரிக்கை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அணை பராமரிப்புக்கு என்று தனியாக நிதி அளிப்பதில்லை என்றும், எனினும் உரிய நடவடிக்கை எடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.