கோவையில் புதிய தலைமுறையின் வேளாண் கண்காட்சி தொடங்கியது



  உழவுக்கு உயிரூட்டு... உழவர்க்கு வாழ்வூட்டு என்ற முழக்கத்துடன் திருச்சியைத் தொடர்ந்து கோவையில் புதிய தலைமுறையின் வேளாண் கண்காட்சி தொடங்கியது. 
  புதிய தலைமுறை சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
   கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறும் கண்காட்சியில், வேளாண்துறை சார்ந்த வல்லுனர்கள், கால்நடை வல்லுனர்கள் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கின்றனர்.
    முதல் நாள் வேளாண்துறை சார்ந்தும், 2 ஆம் நாள் கால்நடைத்துறை குறித்தும் வல்லுனர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். 3 ஆம் நாள் மதிப்பு கூட்டுதல், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயம், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டும் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
   வறட்சிப் பகுதிகளில் குறைவான நீரில் விவசாயம் செய்யும் முறைகள், சொட்டுநீர் பாசன முறைகள் போன்றவை குறித்தும் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். சுமார் 85 அரங்குகளில் நவீன வேளாண் கருவிகள், வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  விவசாயிகளுக்கு மட்டுமின்றி, கால்நடைகள் வளர்ப்பவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயன் தரக்கூடிய அளவில் வேளாண் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது புதிய தலைமுறை.