இந்தியாவின் முதல் நெல் ஆராய்ச்சி நிலையம்

      
pasumainayagan

       ந்தியாவின் பாரம்பரிய உணவு பயிரான நெல் உற்பத்தி அடிப்படை ஆதாரமான ஒன்றாகும். நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், கால சூழலுக்கு ஏற்ற நெல் ரகங்களை உருவாக்குவதும் இன்றியமையாத தேவையாகும். இதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது நெல் ஆராய்ச்சி. அந்த வரிசையில் இந்தியாவின் முதல் நெல் ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது கோவை நெல் ஆராய்ச்சி நிலையம்.

     பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உணவு தானிய உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயேருக்கு ஏற்பட்டது. நவீன ரக நெல் ரகங்களை கண்டறியும் ஆராய்ச்சிக்கு பிரிட்டிஷ் அரசு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது. இதற்காக, இந்தியாவில் முதன் முதலாக கோவையில் நெல் ஆராய்ச்சி நிலையம் 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் ஆராய்ச்சியாளராக ஆங்கிலேயேரான பார்னெல் நியமிக்கப்பட்டார்.

     1930ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை இந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக இருந்த ராமையாவின் தலைமையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரத்தக்க நெல் இனங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. ஆற்காடு கிச்சலி சம்பா நெல் ரகம் கோவை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் அரிய கண்டு பிடிப்பு.


pasumainayagan
    பசுமை புரட்சியின் போது, கோவை நெல் ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட பல ஆய்வுகள் இன்றளவும் பெருமைப்படக்கூடியவை. குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை உருவாக்கப்பட்டன. அதன்பிறகு,1971ம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகத்துடன் நெல் ஆராய்ச்சி நிலையம் இணைக்கப்பட்டது. வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டாலும், உலகம் முழுவதும் இருந்து நெல் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும் ஆய்வகமாக கோவை நெல் ஆராய்ச்சி நிலையம் இன்றளவும் விளங்கி வருகிறது.

     தற்போது மாறி வரும் சூழலில் மகசூலுடன், வறட்சி, உரப் பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கு, பூச்சி தாக்குதல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக்கூடிய நெல் ரகங்களை கண்டறிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுபோன்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது கோவை நெல் ஆராய்ச்சி நிலையம்.

   அதுபோலவே இயற்கை விவசாயம் தற்போது பிரபலமடைந்து வருவதால் அதற்கு ஏற்ற நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சியிலும் கோவை நெல் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக இயற்கை வேளாண்மைக்கான நெல் ரகத்தை கண்டுபிடித்துள்ளது. இதுமட்டுமின்றி ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி போன்ற அரிசி ரகங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதனை தமிழக சூழலுக்கு ஏற்றபடி மாற்றும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் எத்தனையோ நெல் ஆராய்ச்சி நிலையம் இருந்தாலும் தனித்துவம் மிக்கதாக திகழ்ந்து வருகிறது கோவை நெல் ஆராய்ச்சி நிலையம்.