செழிப்பான கோவூர் கிராமம் நெல் விளைந்த பூமி

பசுமை நாயகன் Pasumai Nayagan
பசுமை நாயகன் Pasumai Nayagan
     உழவுக்கு உயிரூட்டு நிகழ்ச்சி தொடர்பான செய்திக்காக கோவூர் சென்றிருந்தேன். சென்னையின் புறநகர் பகுதிகளில் இதுவும் ஒன்று. போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் உள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம். நெடுஞ்சாலை முழுவதும் நிறைந்து விட்ட கடைகள், கணக்கில்லா வாகனங்கள், திரும்பிய திசையெல்லாம் உயர்ந்த கட்டடங்கள் என கோவூர் முற்றிலும் மாறிப்போய் இருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதியான இந்த கிராமம், போரூருக்கு அருகில் இருப்பதால் சென்னை போலவே உருமாறி வருகிறது. செழிப்பாக விவசாயம் நடந்த இந்த பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்து குடியிருப்பு பகுதியாகவே மாறி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாகவே விவசாயம் நடந்த பகுதி என்று நம்பவே முடியவில்லை.

எண்ணம் கொஞ்சம் பின்னோக்கி சுழன்றது…..

பல்லவ மன்னர்கள் காலத்தில் புகழ் பெற்ற பகுதி. முற்கால சோழர்கள் காலத்திலும், பல்ல மன்னர்கள் காலத்திலும் முக்கிய இடத்தை பிடித்து இருந்தது கோவூர். இங்குள்ள சுந்தரேஸ்வரர், செளந்தராம்பிகை கோயில் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுந்தர சோழ மன்னால் கட்டப்பட்டு பிறகு பல்லவர்களால் விரிவு படுத்தப்பட்ட இந்த கோயில் சிற்பகலையும் சிறப்பு வாய்ந்தது. அப்பர் வழிபட்டு படிகம் பாடிய கோயில். தியாகராஜ சுவாமிகளும் வழிபட்ட ஸ்தலம். சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் அருகில் இருப்பதால் அவர் பல முறை இங்குள்ள இறைவனை பாடி தொழுதுள்ளார். பெரிய புரணாத்தைபாடிய சேக்கிழார் அதன் முதல் வரியான “உலகலொம்” என்ற வரியை இங்கிருந்து தொடங்கியதாவும் கூறப்படுகிறது. தொண்டை மண்டல நவகிரக ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
இவைமட்டுமல்லாமல், செழிப்பான கோவூர் கிராமம் நெல் விளைந்த பூமி. மன்னர்கள் காலத்தில் மட்டுமன்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு விவசாயம் சிறப்புற்றே இருந்து வந்துள்ளது. இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தின் செறிவு கொண்ட மண்வளம் நிறைந்த பகுதி கோவூர். செம்பரம்பாக்கள் ஏரி தண்ணீர் கால்வாய் வழியாக எப்போதும் பாய்ந்து வந்ததால் முப்போக விவசாயம் சாசுவதம். விவசாயம் செழித்து வளர்ந்த காரணத்தால் தான் இங்கு வாழ்ந்த மக்களும் வளத்துடனே வாழ்ந்து வந்துள்ளனர்.
Pasumai Nayagan பசுமை நாயகன்

ஆச்சரியத்துடன் சுற்று முற்றும் பார்த்தால் கட்டங்களுக்கு நடுவே சற்று தூரத்தில் ஆங்காங்கே நெல் பயிரிடப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. கட்டடங்களுக்கு நடுவே விளைந்து முற்றிய நிலையில் நெற்கதிர்கள். நெல் மணிகளின் எடையை தாங்க முடியாமல் தலை சாய்ந்து கிடக்கின்றன நெற்கதிர்கள். “பரவாயில்லையே…. இந்த சூழ்நிலையிலும் விவசாயம் நடக்கிறதே,”என்று ஆச்சரியப்பட்டேன். யார் விட்டு விட்டுச் சென்றாலும் விவசாயம் செய்தே தீருவது என்ற அந்த விவசாயிகளின் மன உறுதி என்னை மெய் சிலர்க்கச் செய்தது. விளை நிலத்தை பலரும் பிளாட் போட்டு விற்று கட்டங்களாகி விட்ட நிலையில், வயிற்றுக்கு சோறு இடம் இந்த விவசாயிகளை பார்த்து சலாம் போட தோன்றியது.
அந்த விவசாயிகளிடம் பேச்சுக் கொடுத்தேன்… அவர்கள் சொன்ன விஷயம் புதிதாக இருந்ததுடன், விளை நிலங்களை காத்து நிற்கும் ரகசியத்தையும் அம்பலப்படுத்தின. அந்த பகுதி நிலத்தின் பெரும் பகுதி கோவூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர், செளந்தராம்பிக்கை 

கோயிலுக்கு சொந்தமானது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தே விவசாயிகள் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். ஏக்கருக்கு 6 நெல் மூடைகள் வீதம் குத்தகை தொகையாக கொடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் என்பதால் அந்த நிலத்தை வி ற்க முடியாது. விவசாயம் மட்டுமே செய்து வருவதாக தெரிவித்தனர் அந்த பகுதி விவசாயிகள்.
சரி …‘ மற்றப்பகுதிகளில் மட்டும் கட்டடம் எப்படி?” என்ற கேள்வியை எழுப்பினேன். அதிலும் பெரும்பகுதி கோயில் நிலம் தான். ஆனால் விளை நிலத்தை காயப்போட்டு கட்டட நிலமாக்கி அதில் கட்டடங்கள் கட்டிக் கொள்கின்றனர் குத்தகைக்கு எடுத்தவர்கள். கடைகளை வாடகைக்கு விட்டு அதில் ஒரு தொகையை கட்டினால் போதும். அறநிலையத்துறையும் ஒன்றும் சொல்வதில்லையாம். எப்படியோ தொகை வந்தால் போதும் என்பது அறநிலையத்துறையின் எண்ணம் போலும். அதனால் அந்த பகுதியெல்லாம் கட்டடங்களாகி விட்டது” என்று பின்னணியை சொன்னார்கள் விவசாயிகள்.
மூச்சைப் பிடித்துக் கொண்டு விவசாய சுவாசம் செய்யும் இந்த சிறிய பகுதியும் அப்படி மாறுவதற்கு ரொம்ப நாள் ஆகாது என்பதும் அவர்கள் சொன்னதில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. சரி கோயில் நிலம் தானே! விற்க முடியாவிட்டால் என்ன? குத்தகைக்கு எடுத்தால் திருப்பி கொடுக்கவா போகிறோம்? என்பது மக்களின் நிலை…வாழ்க ரியல் எஸ்டேட்…. வளர்க கட்டடங்கள்…..
                                - ஜெனார்த்தன பெருமாள்
                                                         -பசுமை நாயகன்.