கண்காணிப்புக் குழுவின் முடிவுகளுக்கு கர்நாடகா கட்டுப்பட வேண்டும்

     காவிரி நீர் பங்கீடு தொடர்பான தனது பரிந்துரைகளை, காவிரி கண்காணிப்புக் குழ இரு மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் காவிரி கண்காணிப்புக் குழு எடுக்கும் முடிவுகளுக்கு கர்நாடகா கட்டுப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.
முன்னதாக இன்று நடைபெற்ற வாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி இம்மாதம் 26 ஆம் தேதி வரை கர்நாடகா தமிழ்நாட்டிற்கு 116 புள்ளி 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், வறட்சிக்கால பங்கீடாக 42 டி.எம்.சி. தண்ணீர் வழங்கி இருக்க  வேண்டும் என்றும், ஆனால் இவற்றை கர்நாடகா வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். இதுவரை காவிரியில் இருந்து 3ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் வைத்தியநாதன் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறிய வைத்தியநாதன், காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தாங்கள் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று காவிரி கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதால், தனது இதே நிலைப்பாட்டை அக்குழு மீண்டும் தெரிவிக்காதவாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வைத்தியநாதன் தெரிவித்தார்.
-பசுமை நாயகன்